கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு இருக்கிறதா? அமெரிக்காவில் குடியுரிமை கிடைக்காது
கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது வேறு ஏதாவது சர்வாதிகார கட்சியிலோ உறுப்பினராகவோ, தொடர்போ வைத்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டாம் என்று அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் சீனாவுடன் உள்ள உறவு மோசமானதால் தான் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே வியாபார பிரச்சினை தவிர கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சினையும் சேர்ந்து விட்டது. இதுதவிர ஹாங்காங் பாதுகாப்புக்கான அவசர சட்டம், சிஞ்சியாங்கில் உயிகுருக்களுக்கு எதிரான கொடுமைகள் உட்பட விவகாரங்களிலும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்தது.
தற்போது சீனாவுடனான இந்த மோதலை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா புதிய ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் கம்யூனிஸ்ட் கட்சியிலோ, வேறு ஏதாவது சர்வாதிகார கட்சியிலோ உறுப்பினராக இருக்க கூடாது. உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட அந்த கட்சியுடன் தொடர்பு இருந்தாலும் கூட அமெரிக்காவில் குடியுரிமை கிடைக்காது.அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியுரிமை வழங்கல் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகள் கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சிகளின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாததால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா, சீனா இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.