மேற்கு வங்கத்தில் பாஜக கவுன்சிலர் சுட்டுக் கொலை.
மேற்கு வங்கத்தில் பாஜக கவுன்சிலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், பராக்போர் நகரில் பதற்றம் நிலவுகிறது.
மேற்குவங்கத்தில் அடுத்த மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆங்காங்கே கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பல முறை வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.இந்நிலையில், வடக்கு பர்கானா மாவட்டத்தில் பாஜக கவுன்சிலர் மணீஷ் சுக்லா என்பவர் கொல்லப்பட்டுள்ளார். பராக்போர் நகரில் திடாகார் பகுதி போலீஸ் ஸ்டேஷன் முன்பாக நேற்றிரவு(அக்.4) அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அந்த பகுதியில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அரசியல் விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்ததா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து பாஜக மேலிடப் பார்வையாளர் விஜய் வர்கியா கூறுகையில், மேற்கு வங்க போலீசார் நியாயமாக விசாரிக்க மாட்டார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சஞ்சய்சிங் கூறுகையில், மணீஷ் சுக்லா கொலையைக் கண்டித்து பராக்போரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.