இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுகிறது.. பாதிப்பு எண்ணிக்கை சரிவு.
இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது கட்டுப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகில் பல நாடுகளுக்கு பரவியிருக்கிறது. நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடமும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் இது வரை 65 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. ஒரு லட்சத்து 1782 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.இந்நிலையில், கொரோனா பரிசோதனைகளை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால், குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. கடந்த செப்.17ம் தேதியன்று, கொரோனா பாதிப்புக்காக சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.ஆனால், அதற்கு பிறகு இந்த எண்ணிக்கை தினமும் 4 ஆயிரம் வீதம் குறையத் தொடங்கியது. 2 வாரங்களில் 40 ஆயிரம் குறைந்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 9 லட்சத்து 36,089 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, தொற்று பாதிப்பு அதிகரிப்பது கட்டுப்படத் தொடங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10 லட்சம் மக்கள் தொகைக்கு தினமும் குறைந்தது 140 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்தியாவில் இதை விட 6 மடங்கு அதிகமாக செய்யப்படுகிறது. அதாவது 10 லட்சம் மக்களுக்கு 828 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. 12 மாநிலங்களில் இந்த விகிதம் இதை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு 1032 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.