சமூக இணையங்களில் அதிகரிக்கும் குழந்தைகளின் ஆபாச வீடியோ போலீசார் அதிரடி சோதனை

சமூக இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.வாட்ஸ்ஆப் மெசஞ்சர், டெலிகிராம் உள்பட சமூக இணையதளங்களில் சமீப காலமாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறைக்கு ஐநா தெரிவித்திருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அனைத்து மாநிலங்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டது. இதன்படி கேரளாவில் கடந்த சில மாதங்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலை பிடிக்க ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் தலைமையில் 'ஆபரேஷன் பி ஹன்ட்' என்ற பெயரில் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் கடந்த சில மாதங்களாக நடத்திய ரகசிய விசாரணையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்வதற்கு என்றே ரகசியமாக சிலர் சிலர் தனித்தனி குழுக்களை அமைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் கேரளாவில் பலவேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் 20க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ஆபாச வீடியோக்களை பகிர பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல் போன்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் தீவிரமாக எடுத்து வருகின்ற போதிலும் ஆபாச வீடியோக்களை பகிரும் கும்பல்களின் நடவடிக்கைகள் குறையவில்லை.இதையடுத்து நேற்று இரவு கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்த 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன் உள்பட உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் கூறினார்.

More News >>