கேரளாவில் தொடரும் அரசியல் கொலைகள் சிபிஎம் கிளை நிர்வாகி குத்திக் கொலை 3 பேர் படுகாயம்
கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகே 2 சிபிஎம் தொண்டர்கள் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சூரில் மேலும் ஒரு சிபிஎம் நிர்வாகி கொல்லப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் அரசியல் கொலைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. சிபிஎம், பாஜக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்பட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் அடிக்கடி வெட்டிக் கொல்லப்படுவது இங்கு சகஜமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் கோழிக்கோடு, கண்ணூர் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அரசியல் கொலைகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இங்கு சர்வ சாதாரணமாக வீடுகளில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவது உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன் பள்ளியில் வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஒரு ஆசிரியர் மாணவர்கள் கண்முன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு என்ற இடத்தில் சிபிஎம் கட்சியை சேர்ந்த மிதிலாஜ், ஹக் முஹம்மது என்ற 2 பேர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட முன்விரோதம் தான் இந்த இரட்டை கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருச்சூர் அருகே ஒரு சிபிஎம் கிளை நிர்வாகி குத்திக் கொல்லப்பட்டார். அவருடன் சென்ற மேலும் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருச்சூர் அருகே உள்ள புதுச்சேரி சிபிஎம் கிளை செயலாளராக இருந்தவர் சனூப் (26). நேற்று இரவு இவர் கட்சி தொண்டர்களான விபின், ஜித்து, அபிஜித் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பதுங்கி இருந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் சனூப் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த கொலைக்கு சங்பரிவார் அமைப்பினர் தான் காரணம் என்று சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது. எங்கள் கட்சி தொண்டர்களை கொல்வது தொடர்ந்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து கேரளாவில் மீண்டும் அரசியல் கொலைகள் தொடர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு பாலக்காடு அருகே வடக்காஞ்சேரியை சேர்ந்த ரமேஷ் என்ற பாஜக தொண்டர் ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். இவர் படுகாயங்களுடன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்துடு பாலக்காட்டிலும் பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.