சமூக இணையதளங்களில் ஆர்வமில்லாத பெண் தேவை திருமணம் ஆகாமலே இறக்கவேண்டி வரும் என கமெண்ட்
சமூக இணையதளங்களில் ஆர்வமில்லாத பெண் தேவை என வந்த விளம்பரத்திற்கு ருசிகர கமெண்டுகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.வழக்கமாக மணமகன் தேவை, மணமகள் தேவை விளம்பரங்களை நாம் நாளிதழ்களில் பார்த்திருப்போம். அதில் பொதுவான சில வாசகங்கள் தான் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். மணமகன் தேவை என்றால், நல்ல வேலை, நல்ல உயரம், ஜாதி உட்பட விவரங்கள் தான் இடம் பெற்றிருக்கும். மணமகள் தேவை விளம்பரத்தில், நல்ல அழகு, சிவந்த நிறம், ஜாதி, வேலை உள்பட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அபூர்வமாக சில சமயங்களில் சில ருசிகரமான கோரிக்கைகளும் அந்த விளம்பரங்களில் இருக்கும்.
அப்படி ஒரு ருசிகரமான மணமகள் தேவை விளம்பரம் தான் இப்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு ஆங்கில பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தை ஐஏஎஸ் அதிகாரியான நிதின் சாங்க்வான் என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 'முற்போக்குவாதிகளான மணமகன் மற்றும் மணமகள்களே... இந்த விளம்பரத்தை சற்று கவனியுங்கள், வாழ்க்கை துணையை தேடுவதற்கான நிபந்தனைகள் மாறிவருகிறது' என்ற குறிப்புடன் சாங்க்வான் அந்த விளம்பரத்தை பகிர்ந்துள்ளார்.
'பார்ப்பதற்கு அழகான, அடக்கமான, நல்ல குணமுள்ள, உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஆராய்ச்சியாளருமான, சொந்தமாக வீடும், காரும் உள்ள, பெற்றோர் உயிருடன் உள்ள கமர்புகூர் பகுதியை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு மெலிந்த, அழகும், நல்ல குணமும், உயரமும் கொண்ட பெண் தேவை. பெண் சமூக இணையதளங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது'.... இப்படி போகிறது அந்த மணமகள் தேவை விளம்பரத்தில் உள்ள வாசகங்கள்.
சமூக இணையதளங்களில் இளையதலைமுறையினர் மூழ்கிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில் வந்துள்ள இப்படி ஒரு விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு ருசிகரமான பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. 'பெண்ணை கண்டுபிடிக்க இவர் நிச்சயம் பெரும் சிரமப்படுவார். ஒருவேளை இவர் திருமணம் ஆகாமலேயே இறக்க வேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று ஒருவர் கமெண்ட் தெரிவித்துள்ளார். 'தேவலோகத்தில் தான் இப்படி ஒரு பெண் கிடைப்பார்' என்று இன்னொருவர் கமெண்ட் தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து இதுபோன்ற பல ருசிகரமான கமெண்டுகள் டுவிட்டரில் குவிந்து வருகின்றன.