காங்கிரஸ் தலைவர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், மிகப் பெரிய கோடீஸ்வரர். ஓட்டல்கள் உள்பட பல தொழில்களில் ஈடுபட்டு வருபவர். சித்தராமையா அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்து கோலோச்சியவர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர். குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது.
இதன்பின்னர், சிவக்குமார் மீது மத்திய அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குகள் பதிவு செய்தன. ரூ.200 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யததாக அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தது. அதன்பின், அவர் ஜாமீனில் விடப்பட்டார். தற்போது கர்நாடக காங்கிரஸ் மாநில தவைராக அவர் உள்ளார்.இந்நிலையில், சிவக்குமார், அவரது சகோதரர் சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், கம்பெனி அலுவலகங்களில் இன்று சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. கனங்கபுரா தோடல்லஹள்ளியில் உள்ள சிவக்குமாரின் வீடு உள்பட கர்நாடகாவில் 9 இடங்களிலும், டெல்லியில் 4 இடங்கள் மற்றும் மும்பையில் ஒரு இடம் என்று 14 இடங்களில் இன்று(அக்.5) காலை 6 மணி நேரம் முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.சிவக்குமார் குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக ரெய்டு நடைபெறுவதாகவும் சிபிஐ தெரிவித்திருக்கிறது. அதே சமயம், பாஜக அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுவதாகவும், இந்த ரெய்டுகள் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பார் ரன்தீப்சுர்ஜிவாலா, சித்தராமையா ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.