சளி பிடித்தால் கோவிட்-19 பாதிப்பாக இருக்குமா?
பருவ கால பாதிப்பான சளி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றின் அறிகுறிகளும் கோவிட்-19 பாதிப்புக்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதினால் குழப்பம் ஏற்படுகிறது.
இன்ஃப்ளூயன்ஸாவின் நோய்க்குறிகள்
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைபாரம், இருமல் மற்றும் தும்மல் ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள். குழந்தைகளுக்கு இவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் இருக்கக்கூடும்.
சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் எண்ணிக்கை குறைந்தது நூறு இருக்கக்கூடும். ஆனால், பருவகால மாற்ற இன்ஃப்ளூயன்ஸாவை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. 'ஃப்ளூ' தாக்கினால் சாதாரண சளியைக் காட்டிலும் பல மடங்கு அசதி இருக்கும்.
ஃப்ளூ - கொரோனா ஒற்றுமை மற்றும் வேற்றுமை
அதிக காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் அசதி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 பாதிப்பு இரண்டுக்குமான ஒற்றுமையாகும். இவை இருந்தால் கோவிட்-19 பாதிப்பாக இருக்குமோ என்ற அச்சம் எழுவது இயற்கை.
ஃப்ளூ மற்றும் கோவிட்-19 பாதிப்புக்கு இடையிலான வேற்றுமையை வாசனை இழப்பு அல்லது மணத்தை உணர இயலாமை என்ற அறிகுறியாமல் கண்டுகொள்ள முடியும். வெறுமனே மூக்கடைப்பால் இந்த வாசனை இழப்பு ஏற்படுவதில்லை. கோவிட்-19 நோயாளிகளுக்கு வெங்காயம் அல்லது காஃபி போன்ற நெடி அல்லது நறுமணத்தைக் கூட உணர இயலாது. ஆனாலும், கொரோனா பாதிப்புள்ளோரில் 87 சதவீதத்தினருக்கு மாத்திரமே இந்த வாசனை இழப்பு அறிகுறி உள்ளது.
கொரோனா தீவிர பாதிப்பு
மூச்சுவிடுவதில் அதிக சிரமம், நெஞ்சில் வலி அல்லது அழுத்தப்படுவது போன்ற உணர்வு, உதடுகள் மற்றும் முகத்தில் நீலம் பாவுதல், குழப்பமான மனநிலை, சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் அளிக்க முடியாமை, சுயநினைவிழத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கொரோனா பாதிப்பு, இரத்தம் உறைய காரணமாகி இருதயம், மூளை மற்றும் நுரையீரலில் பாதிப்பை உருவாக்கக்கூடும். அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நீடித்த இருதய பாதிப்புக்கு வரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கொரோனா நுரையீரல் காற்றுப்பைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, தீவிர சுவாச பாதிப்பை உருவாக்கிவிடுகிறது.
ஆக்ஸிமீட்டர்
கொரோனா பாதிப்பை இனங்கண்டுகொள்வதற்கு ஆக்ஸிமீட்டர் பரிந்துரைக்கப்படுகிறது. விரலின் நுனியில் மாட்டக்கூடிய இந்தக் கருவி, நம் இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை காட்டும். ஆக்ஸிமீட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்க வேண்டும். பலமுறை சோதிக்கும்போதும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு 92 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவ கண்காணிப்பை நாடவேண்டும்.