நேபாள இளம்பெண் பலாத்காரம்.. புகார் கொடுக்க 800கி.மீ. பயணம்..
லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஹத்ராசில் 19 வயதான இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. ஆனாலும் தினமும் இங்கு இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேபாள நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த 22 வயதான ஒரு இளம்பெண் கடந்த இரு வருடங்களுக்கு முன் வேலை தேடி லக்னோவுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நிறுவனத்திற்கு அருகிலேயே தன்னுடைய தோழி ஒருவருடன் வாடகை வீட்டில் இவர் தங்கியிருந்தார்.இந்நிலையில் அவரது தோழி மூலம் துபாயில் என்ஜினியராக பணிபுரிந்து வரும் பிரவீன் ராஜ்பால் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இதற்கிடையே அந்த இளம்பெண்ணின் தோழி அடிக்கடி அவரிடமிருந்து பணம் கடன் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த இளம்பெண்ணை அவரது தோழி தாக்கியுள்ளார். இது குறித்து அவர் பிரவீனிடம் கூறினார். இதையடுத்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் அவருக்கு பிரவீன் அறை எடுத்து கொடுத்தார்.
இதன்பின்னர் அந்த ஹோட்டலில் இருந்து தான் அவர் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரவீன் துபாயிலிருந்து லக்னோ திரும்பினார். அந்த இளம்பெண் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரவீன், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த பலாத்கார காட்சிகளை பிரவீன் இணையதளங்களில் பகிர்ந்தார். இது குறித்து அறிந்த அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். போலீசில் புகார் செய்ததால் உயிருடன் இருக்க முடியாது என்று பிரவீன் அவரை மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த அந்த இளம்பெண் நாக்பூரில் உள்ள தனது தோழியிடம் விவரத்தை கூறினார். உடனடியாக நாக்பூர் புறப்பட்டு வருமாறும், அங்கு சென்ற பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த இளம்பெண் 800 கிமீ தாண்டி நாக்பூருக்கு சென்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக லக்னோ போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். லக்னோ போலீசார் பிரவீனை தேடிவருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு இளம்பெண் உயிருக்கு பயந்து 800 கிமீ தாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.