தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரானோ..
கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.5) புதிதாக 5395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 25,391 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5572 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 69,664 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 62 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9846 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 45 ஆயிரத்து 381 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1367 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 155 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 74,143 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 343 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 195 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 37,494 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33,501 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் 468 பேருக்கும், சேலத்தில் 337 பேருக்கும், திருப்பூரில் 132 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 275 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 133 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சென்னை, வேலூர், கோவை மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிக்கிறது. அதே போல், சேலம், நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் தினமும் புதிதாக 200 பேருக்கு கொரோனா பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.