மிரட்டிய ரபாடா! அரண்டுபோன பெங்களூர்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (05-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகள் துபாயில் மோதின.இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் வென்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் அணி உள்ளது.

இந்த போட்டியில் பெங்களூர் அணி வென்றால் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு இருந்தது அதனைச் சிறிதளவு கூட இடம் கொடுக்காமல் வெற்றியை ரபாடாவின் வேகபந்தில் சூரையாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.டாஸ் வென்று பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதே ஆடுகளத்தில் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியிலும் இதே தவறை தான் பெங்களூர் கேப்டன் கோலி செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க இணை நிதானமாக ஆடியது, இதுவரை நடந்த போட்டியில் டெல்லியின் பவரபிளே ஓவரில் 6.8 என்ற ரன்ரேட் விகிதத்திலேயே ஆடியுள்ளது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தவான் மற்றும் ப்ரித்தி ஷா இருவரும் இணைந்து நிதானமாக ஆடி பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி, அதே சமயம் ரன்ரேட் 10 மேல் விளையாடிச் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். எதிர்பாராத விதமாக ப்ரித்வி ஷா 42 ரன்னில் சிராஜ் ஓவரில் அவுட் ஆக, தவானும் 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

முதல் 12 ஓவர் வரை சிறப்பாகப் பந்து வீசிய பெங்களூர் அணி, டெல்லி கேப்டன் ஷாரேயாஸ் விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர்.12 ஓவர் முடிவில் 90/3 என்ற நிலையில் பரிதவித்தது டெல்லி அணி. ஆனால் எப்போதும் போல டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசத் தவறியதால், பெங்களூர் அணி கடைசி 8 ஓவரில் 106 ரன்களை வாரி வழங்கியது.

நான்காவது விக்கெட் இணைக்கு ஒன்று சேர்ந்த ஸ்டேய்னஸ் மற்றும் பண்ட் இருவரும் இணைந்து அணியின் ரன்ரேட்டை அதிரடியாக உயர்த்தினர். பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சைனி ஓவரை சட்னியாக்கி தெறிக்கவிட்டார் ஸ்டேய்னஸ். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.அதிரடியாக விளையாடிய ஸ்டேய்னஸ் 26 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர் என 53 ரன்களை குவித்தார். ஃபண்ட் தன் பங்கிற்கு 37 ரன்களை குவித்தார். இதனால் இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி 196/4 ரன்களை குவித்தது.

இருபது ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி, பெங்களூர் அணியின் இளம் அதிரடி வீரரான படிக்கல் 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.பின்னர் பின்ச் உடன் கோலி இணைய, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்ச் அக்சர் பட்டேல் ஓவரில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ், கோலியுடன் இணைந்தார். ஆனால் டெல்லியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெங்களூர் அணியினர் திணறினர்.டெல்லியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா அதிரடியாகப் பந்து வீச, அவரின் வேகத்தில் கோலி உட்பட அனைவரும் நிலைகுலைய நான்கு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிரட்டலாக உதவினார்.

பெங்களூர் அணி சார்பாகக் கோலி மட்டுமே 39 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 43 ரன்களை குவித்தார். பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 137/9 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியின் பீல்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏகப்பட்ட மிஸ் ஃபீல்ட் மற்றும் ஸ்டேய்னஸ் கேட்சை தவறவிட்டது என பல்வேறு விஷயங்கள் டெல்லிக்குச் சாதகமாக அமைந்தது. மொத்தத்தில் டெல்லியின் கேப்டன் ஸ்ரேயாஸ் நேற்றைய போட்டியில் நேர்த்தியாகச் செயல்பட்டார். ரபாடாவை பவர்பிளேயில் 1 ஓவர் மட்டுமே வீச வைத்து , 10 ஓவருக்கு பின் அவரின் 3 ஓவரை வீச வைத்தது அவரின் கேப்டன்ஷிப் லெவலை உயர்த்துகிறது.

More News >>