அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி.. ஓ.பி.எஸ். என்ன செய்வார்?
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர், ஓ.பி.எஸ். அடுத்து என்ன செய்வார் என்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில், கடந்த செப்.28ம் தேதி கட்சியின் செயற்குழு கூடியது. சுமார் 280 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வந்த போது, வருங்கால முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். அடுத்து முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்த போது அவரது ஆதரவாளர்கள், சாமான்யர்களின் முதல்வரே என்று கோஷமிட்டனர்.
கூட்டத்தில், அதிமுகவின் சார்பில் முதல்வர் வேட்பாளராகத் தன்னையே அறிவிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துப் பேசினார். இருதரப்பிலும் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர், அக்.7ம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று நிருபர்களிடம் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்குச் சென்று 2 நாட்களாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த முடிவும் எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.ஏற்கனவே கட்சியில் தனக்கு எந்த செல்வாக்கும் இல்லாத நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்து விட்டால், தனது நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்று ஓ.பி.எஸ். நினைக்கிறார்.
அதனால், தேர்தலில் கூட்டணி, சீட் கொடுப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை முடிவு செய்ய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். பிடிவாதமாக உள்ளார். இப்படிச் செய்வதன் மூலம், கட்சியில் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க விடாமல் பலமிழக்கச் செய்யலாம் என்று ஓ.பி.எஸ். கருதுகிறார்.இந்த சூழ்நிலையில், ஓ.பி.எஸ். நேற்றே சென்னைக்கு வந்து விட்டார். இன்று(அக்.6) காலை அவரது இல்லத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அதே சமயம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடன் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இருதரப்பிலும் ஒரு சுமுக உடன்பாட்டை ஏற்படுத்த அமைச்சர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். எனவே, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதுடன், வழிகாட்டுதல் குழுவையும் அமைத்து அறிவிப்பு வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.அந்த வகையில், நாளை (அக்.7) முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஒரு வேளை சமரச உடன்பாட்டில் ஓ.பி.எஸ்.சுக்கு திருப்தி கிடைக்காவிட்டால், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது மேலும் தாமதமாகலாம்.
அதையும் மீறி எடப்பாடி ஆதரவாளர்கள் தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்தால், அதற்கு ஓ.பி.எஸ் பதிலடி கொடுப்பார் என்று தெரிகிறது. துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மாவட்டம்வாரியாகச் சென்று, அதிமுக தொண்டர்களிடம் கருத்துக் கேட்கச் செல்வார் என்றும் அதன் மூலம் மீண்டும் தர்மயுத்தத்தை ஆரம்பிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது.