5 மாதத்துக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரம்பம்: வரும் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி.. மத்திய அரசு கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிப்பு..

கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் முடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 5 மாதம் கடந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து முடிவடைந்திருக்கும் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி இருக்கிறது. தியேட்டர்களை திறக்க கேட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இதையடுத்து வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்கள், அனுமதிக்க வேண்டும். இரு இருக்கைக்கு இடைவெளிவிட்டு அடுத்தவர் அமர வேண்டும். உட்காரக்கூடாத இருக்கைக்கு அடையாளம் குறி இட வேண்டும். ரசிகர்களுக்கு காய்ச்சல் டெஸ்ட் எடுத்தபிறகு காய்ச்சல் இல்லாவிட்டால் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்.எப்போதும் டிக்கெட் கவுண்டர்கள் திறந்து வைக்க வேண்டும். இடை வெளிவிட்டு நிற்க அடையாளக் குறி இட வேண்டும். டிஜிட்டல் முறையில் டிக்கெட் விற்பனை ஊக்குவிக்க வேண்டும். தியேட்டர் முழுவதும் படம் தொடங்குவதற்கு முன்பும் படம் முடிந்த பின்னும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். நொறுக்குத் தீனி அனுமதி கிடையாது .

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம் மட்டுமே விற்க வேண்டும். படம் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் கொரோனா விழிப்புணர்வு பற்றிய படங்களைத் திரையிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அதிக தியேட்டர்கள் இருந்தால் கூட்டம் சேராதபடி நேர அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் மத்திய அமைச்சர் அறிவித்தார். மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தமிழக அரசும் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று கூறினார்.விரைவில் தமிழகத்திலும் தியேட்டர்கள் திறக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்க மகிழ்ச்சியாக காத்திருக்கின்றனர்.

More News >>