தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை...!
ஓடும் கண்டைனர் லாரியை மற்றொரு லாரி மூலம் ஓவர்டேக் செய்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த லாரி கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதி, ஆந்திர மாநிலத்தின் நகரி என்ற ஊரின் அருகே சென்ற பொழுது, மற்றொரு லாரியில் வந்த கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கியைக் காட்டி லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் டிரைவரை மிரட்டி , லாரியில் இருந்த செல்போன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து தாங்கள் வந்த லாரியில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த கஞ்சர்பட்ஸ் என்ற கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.கஞ்சர்பட்ஸ் கொள்ளைக் கும்பலின் ஸ்டைலே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓவர்டேக் செய்து நிறுத்தி கன்டெய்னரின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிப்பது தான்.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தேவாஸுக்கு சென்று விசாரணை நடத்தினர். கஞ்சர்பட்ஸ் கும்பலின் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்த போலீசாருக்கு இந்த கும்பல் தான் ஸ்மார்ட் போன்களை கொள்ளையடித்துள்ளது என்பது உறுதியானது. இந்த கொள்ளச் சம்பவத்திற்கு ராம் காட் என்ற சாஃப்ட்வேர் என்ஜினீயர் தான் மூளையாக இருந்தது, தெரியவந்தது.கொள்ளையடிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் கடப்பா, பெல்லாரி வழியாக மகாராஷ்டிராவிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக ராம் காட், ரோஹித் ஜல்லா, அங்கித் ஜான்ஜா ஆகிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் புனேவில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.