தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா இன்று கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற பதினோரு அம்மன் கோயில்களிலும் ஒரே நேரத்தில் கால்நாட்டு நடத்தப்பட்டு தசரா பூஜைகள் தொடங்கப்பட்டன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாகப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.மகிஷாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய அன்னை பராசக்தி 9 நாட்கள் கொலுவில் இருந்து பத்தாம் நாளான விஜயதசமி அன்று மகிஷாசுரமர்த்தினி யாக அவதாரமெடுத்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி தான் தசரா திருவிழா.

மைசூருக்கு அடுத்தபடியாக இந்த திருவிழா திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மிக விமர்சையாக நடக்கும்.இங்கு உள்ள பிரசித்தி பெற்ற பதினோரு அம்மன் கோயில்களில் உள்ள சப்பரங்கள் அனைத்தும் வீதி உலா வந்து ஒரே இடத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

இந்த ஆண்டு திருவிழாவுக்கான துவக்க நிகழ்ச்சியான கால் நாட்டுதல் இன்று தொடங்கியது. இதனையொட்டி பாளையங்கோட்டையில் பிரதான அம்மன் கோவிலான ஆயிரத்தம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அரசு உத்தரவின்படி திருவீதி உலா நடைபெறும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை மட்டும் திருக் காலுடன் பக்தர்கள் சுற்றி வந்து கால் நாட்டப்பட்டது.

இதேபோல் மற்ற பத்து கோவில்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் தொடங்கப்பட்டு கால் நாட்டப்பட்டது விஜயதசமி தினத்தன்று பதினோரு அம்மன் கோயில்களில் இருந்து சப்பரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள மைதானத்தில் வந்துசேரும். அங்கு மகிஷாசுர சம் ஹாரம் நடக்கும்.இந்த ஆண்டு கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக வீதிஉலாவிற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும் சம்ஹார நிகழ்ச்சி மட்டும் நடத்த அரசு அனுமதித்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்ஹார நிகழ்ச்சியின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் அர்ச்சனை செய்யும் பொருட்களை வைத்து சுவாமிக்குப் பூஜை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

More News >>