அன்று அதை படிக்காதது இப்போது வருத்தமாக இருக்கிறது.. பிரபல நடிகை வேதனை...!
இளம் வயதில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான 'களரிப்பயட்'டை படிக்காதது இப்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று பிரபல நடிகை லிசி கூறினார்.மலையாள சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் லிசி. 1982ல் 'இத்திரி நேரம் ஒத்திரி காரியம்' என்ற படத்தில் அறிமுகமான இவர் 'போயிங் போயிங்', 'அயனம்', 'நிறக் கூட்டு', 'தாளவட்டம்' உட்பட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
பிரேம் நசீர் மோகன்லால் மம்மூட்டி உட்பட அனைத்து மலையாள முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழில் இவர் 'விக்ரம்', 'ஆனந்த ஆராதனை', 'மனசுக்குள் மத்தாப்பு', 'பகலில் பவுர்ணமி: ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிரபல டைரக்டர் பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்குக் கல்யாணி பிரியதர்ஷன் என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை லிசி கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டை படிக்கத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். இத்தனை வயதுக்குப் பின்னர், தான் தற்காப்புக் கலையைப் படிப்பது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.இந்த வயதில் தற்காப்புக் கலை தேவை தானா என்று நீங்கள் கேட்காதீர்கள். வயது எதைப் படிப்பதற்கும் ஒரு தடையல்ல. கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டுக்கு பல்வேறு நல்ல பலன்கள் உள்ளன. இதை அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இந்த தற்காப்புக் கலை நம்முடைய மனதிற்கும், உடலுக்கும் ஏராளமான பலன்களைத் தரும். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் இது உதவும்.
இளம் வயதிலேயே இதை நான் படித்திருக்க வேண்டும். இப்போது அதை நினைத்து வேதனைப்படுகிறேன். தற்போதைய சமூகத்தில் பெண் குழந்தைகள் இது போன்ற தற்காப்புக் கலைகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.