யாரும் என்னை கடத்தவில்லை.. நானாகத்தான் விரும்பி திருமணம் செய்து கொண்டேன்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வின் காதல் மனைவி வீடியோ வெளியீடு.
அதிமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு.சில தினங்களுக்கு முன் இவர் தியாக துருகம் என்ற ஊரில் அர்ச்சகராக இருக்கும் சுவாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் சுவாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் விருப்பமில்லை. அதேசமயம் பிரபு தனது பெற்றோரின் சம்மதத்துடன் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
தனது மகளை எம்எல்ஏ பிரபு கட்டாயப்படுத்திக் கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுவாமிநாதன் போலீசில் புகார் செய்திருந்தார்.சௌந்தர்யா மேஜர் பெண் என்பதாலும் அவரை மணம் முடித்தவர் ஆளுங்கட்சி எம்.எல். ஏ. என்பதாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றிய தகவல் பரபரப்பாக வலம் வந்த நிலையில் எம்எல்ஏ தனது மனைவியுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் அதில் தாங்கள் இருவரும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டோம் என்றும் கட்டாயப்படுத்தியோ கடத்தியோ திருமணம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சுவாமிநாதன் தனது மகளை மீட்டுத்தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.இந்த நிலையில் சவுந்தர்யா மட்டும் தனியாக ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அதில் தான் விருப்பப்பட்டு காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.