காங்கிரஸ் கட்சியில் நிம்மதியாக இருக்கிறேன் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் நடிகை குஷ்பு அறிவிப்பு..!
காங்கிரசில் இருந்து விலகி வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு டெல்லியில் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாகக் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட குஷ்பு வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து இவர் டுவிட் செய்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.கடந்த வாரம் அவர் டெல்லியில் முக்கிய பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக சமூக இணையதளங்களில் தகவல் பரவியது. இது மத்திய அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று ஹத்ராஸ் இளம்பெண் பலாத்கார சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் குஷ்பு கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறியது: நான் காங்கிரசில் இருந்து விலகி வேறு கட்சியில் சேரப்போவதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் அது வதந்தி தான். அதில் எந்த உண்மையும் கிடையாது. ஏற்கனவே இது குறித்து நான் பலமுறை தெரிவித்துள்ளேன். காங்கிரஸ் கட்சியில் தற்போது நான் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு இக்கட்சியில் எந்த குறையும் இல்லை. எந்த காரணம் கொண்டும் காங்கிரசில் இருந்து விலக மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து குஷ்புவின் கட்சி விலகல் குறித்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.