கொரோனா பரவல் அதிகரிப்பு மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு சர்வதேச சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மலையும், இயற்கை சூழலும் நிறைந்த இந்த பகுதி கேரளாவின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. கோடை காலங்களில் இங்கு குளு குளு காலநிலை நிலவும்.

இதை அனுபவிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதுமட்டுமில்லாமல் மூணாறு பகுதியில் மழைப் பொழிவும் அதிகமாகும். வருடத்தில் 8 முதல் 10 மாதங்கள் வரை இங்கு மழை பெய்யும். இதனால் மழை அழகை ரசிப்பதற்கும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.இந்நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக நோய் பரவல் சற்று குறைந்தது. இதையடுத்து படிப்படியாக சுற்றுலா பயணிகளுக்கு மூணாறு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் இப்பகுதியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

நேற்று நடத்திய பரிசோதனையில் 20க்கும் மேற்பட்டோருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மூணாறு டவுன், பழைய மூணாறு உள்பட 6 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதனால் நேற்று முதல் மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 2 வாரங்களுக்கு பின்னரே அப்போதைய சூழ்நிலையை பொறுத்து சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று மூணாறு சப்-கலெக்டர் பிரேம் கிருஷ்ணா கூறினார்.

More News >>