சண்டைக் காட்சியில் படுகாயம் பிரபல நடிகர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு...!
சண்டைக் காட்சியின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் டொவினோ தாமஸ். கடந்த 2012ல் 'பிரபுவின்டெ மக்கள்', என்ற படத்தில் இவர் அறிமுகமானார்.
இதன்பின்னர் 'ஏபிசிடி', 'சார்லி', 'மாயநதி' 'கப்பி', 'லூக்கா' உட்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் மாரி 2 படத்தில் வில்லனாகத் தோன்றியுள்ளார். தற்போது இவர் 'மின்னல் முரளி', 'வரவு' மற்றும் 'கள' ஆகிய படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
'கள' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாகச் சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்தன. நேற்று டொவினோ தாமசின் வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குப் பரிசோதித்த போது வயிற்றுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டொவினோவை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரோகித் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யா பிள்ளை, லால் மற்றும் பலர் நடிக்கின்றனர்.