மோடிக்கு 8 ஆயிரம் கோடி விமானம் வாங்கியதை ஏன் கேட்கவில்லை.. ராகுல்காந்தி காட்டம்..
பிரதமர் மோடிக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு சொகுசு விமானம் வாங்கியது பற்றி ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல்காந்தி காட்டமாகக் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் 2 புதிய வேளாண் சட்டங்களையும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் 3 நாள் கண்டனப் பேரணிகளில் ராகுல்காந்தி பங்கேற்றார். முதல் நாள் பேரணியில் அவர் டிராக்டரில் அமர்ந்து சென்றார். அவருடன் மாநில முதல்வர் அமரீந்தர்சிங்கும் சென்றார். அப்போது இருவரும் அமர்வதற்கு டிராக்டர் இருக்கைகளில் ஷோபா குஷன் போடப்பட்டிருந்தது.
இதைக் குறிப்பிட்டு, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், இது விவசாயிகளை ஏமாற்றும் போராட்டம். இந்த சட்டங்களால் பாதிக்கப்படும் இடைத்தரகர்களுக்காக ராகுல்காந்தி போராட்டம் நடத்துகிறார். டிராக்டரில் குஷன் போட்டுச் செல்கிறார். இது சுற்றுலா போராட்டம்(புரடெஸ்ட் டூரிஸம்) என்று கிண்டலடித்தார்.இதற்கு ராகுல்காந்தி இன்று பதிலளிக்கையில், டிராக்டரில் என் மீது கொண்ட அன்பால் போடப்பட்டிருந்த குஷன் குறித்துப் பேசுகிறீர்களே.. மக்களின் வரிப்பணத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்குப் பிரதமர் மோடி சிறப்பு போயிங் விமானம் வாங்கியிருக்கிறாரே.. அதிலும் சீனப்படைகள் நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியுள்ள நேரத்தில், பொருளாதார மந்தநிலையால் மக்கள் அவதிப்படும் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகைக்குச் சொகுசு விமானம் வாங்க வேண்டுமா? ஏன் யாருமே இதைத் தட்டிக் கேட்பதில்லை.. என்று காட்டமாகக் கூறினார்.