சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை : 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்...!
பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை மேற் கொண்ட 8 கல்லூரிகளுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகக் கடந்த 2017 ம் ஆண்டு புகார்கள் எழுந்தது. கவர்னர் கிரண்பேடி இதுகுறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சிபிஐக்கும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதி இருந்தார்.
இதைத்தொடர்ந்து 2017 செப்டம்பர் மாதம், 2016-17 ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. , விதிகளை மீறி 770 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருந்தது அந்த ஆய்வில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவ்வாறு விதிகளை மீறி கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை உடனே டிஸ்மிஸ் செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் வழக்குகளும் தொடரப்பட்டது. இதனிடையே, புதுச்சேரி அரசு, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியது. அதை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, விதிகளை மீறிச் சேர்க்கப்பட்ட 105 எம்.பி.பி.எஸ். மாணவர்களை நீக்க உடடினயாக உத்தரவிட்டது.
அதன்படி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில்-41 மாணவர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில்-38 மாணவர்களும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில்-26 மாணவர்கள் என மொத்தம் 105 மாணவர்கள் தங்களின் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது .
இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விதிகளை மீறி முறைகேடாக மாணவர்களைச் சேர்ந்த 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், எம்சிஐ-ன் உத்தரவு சரிதான் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.