சபரிமலையில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு சட்டத்தில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளில் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பது என்றும், தினமும் 1000 பேரை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்க வேண்டும். சபரிமலை வந்த பின்னரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
இந்நிலையில் மண்டல பூஜைக்கு முன்னோடியாக இம்மாதம் நடைபெற உள்ள ஐப்பசி மாத பூஜைகளில் சோதனை அடிப்படையில் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஐப்பசி மாத பூஜையின்போது பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யபட்டது. வரும் 16ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் தினமும் 250 பேர் வரை அனுமதிக்க இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.