கேரளாவில் எகிறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 10 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் டெல்லி, மகராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோது கேரளாவில் மட்டும் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. கேரளாவில் மேற்கொண்டு வரும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை உள்ளது என கூறப்பட்டது. ஆனால் இந்த நிலை தற்போது மாறிவிட்டது. கடந்த சில மாதங்களாக கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.கடந்த இரு வாரங்களாக சராசரியாக நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த வாரம் முதன்முதலாக நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில் இன்று அதிகபட்சமாக இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 10,606 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மிக அதிகமாக 1,576 பேருக்கு நோய் பரவியுள்ளது. ஒரு மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 1,500ஐ கடப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதிவேகமாக நோய் பரவுவதை தொடர்ந்து கேரளாவில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் உட்பட நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் முதல் கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.