கொரோனா காலம்: மருத்துவமனைக்குச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கைக்கு சில தளர்வுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன. ஆனாலும் மருத்துவமனைகளுக்குச் செல்வதை குறித்த பயம் இன்னும் முற்றிலும் விலகவில்லை.எப்போதும்போல் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டிய கட்டாயம் நீடிக்கிறது. அரசாங்கமும் சுகாதாரதுறையினரும் அறிவித்துள்ள நெறிமுறைகளுக்கு உள்பட்டு மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும் நிலையில் தவிர்ப்பது ஆபத்தை உண்டாக்கக்கூடும்.மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டிய அவசியம் நேரும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:

கூட்டத்தை தவிர்க்கவும்

மருத்துவமனைகளில் கூட்டமாக சேர்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஆகவே, நீங்கள் செல்ல இருக்கும் மருத்துவமனையை தொலைபேசி மூலம் அல்லது இணையவழியில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைக்கு முன்பதிவு செய்துகொள்ளவும். மருத்துவர் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உறுதி செய்ய பின்னர் மருத்துவமனைக்குச் செல்லவும்.

பல மருத்துவமனைகளில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அப்படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து தேவையான இடத்துக்கு மட்டும் செல்லவும். மொத்தமாக ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க இது உதவும்.

முகக்கவசம்

மருத்துவரிடம் நேரம் பெற்று மருத்துவமனைக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ளவும். ஆல்கஹால் கொண்ட சானிடைசரை கொண்டு செல்லவும். கையுறைகளோடு, உங்களுக்குத் தேவையான தண்ணீரை வீட்டிலிருந்தே பாட்டிலில் கொண்டு செல்வது நல்லது.வால்வுகள் உள்ள முகக்கவசங்களை தவிர்க்கவும். கடைகளில் கிடைப்பது அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று அடுக்குக் கொண்ட கவசங்களை பயன்படுத்தவும்.

யார் தவிர்க்கவேண்டும்?

கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். மருத்துவமனைக்குச் செல்பவருடன் துணைக்கு ஒருவர் மட்டுமே செல்லவும். தேவையின்றி அநேகர் ஒன்றாய் செல்வதை தவிர்க்கவும். துணைக்குச் செல்பவர் நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இருமல், சளி போன்ற உடல் உபாதைகள் இருப்பவர்கள் வீட்டினுள் இருக்கவேண்டும்.

வாகனம்

மருத்துவமனைக்குக் கூடுமானவரைக்கும் சொந்த வாகனத்தில் செல்வது நலம். பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக முன்பே பதிவு செய்து வாடகை வாகனங்களை அழைக்கலாம். வாடகை கார் அல்லது ஆட்டோவில் ஏறும் முன்னர் சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவவும்.வாகனம் மற்றும் மருத்துவமனையில் பணமாக செலுத்துவதை தவிர்த்து பணமற்ற பரிவர்த்தனையை (Digital transactions) பயன்படுத்தவும்.

குழப்பம் வேண்டாம்

உங்களது பழைய மருத்துவ அறிக்கைகளை கண்டிப்பாக கொண்டு செல்லவும். மருத்துவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை முன்பே நன்கு யோசித்து எழுதி வைத்துக்கொள்வது நல்லது. மருத்துவமனைக்குச் சென்ற பிறகு யோசித்து, கேட்கவேண்டியவற்றை தவறவிடாமல் இருக்க இது உதவும்.

More News >>