சென்னை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிப்பு..
சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.8) 5447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 35,855 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.
அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5524 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 80,736 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 67 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9984 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இது 10 ஆயிரத்தைத் தாண்டி விடும். தற்போது மாநிலம் முழுவதும் 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 1369 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 138 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 76,779 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 324 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 262 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 38,103 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33,977 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் புதிதாக 473 பேருக்கும், சேலத்தில் 324 பேருக்கும், ஈரோட்டில் 149 பேருக்கும், திருப்பூரில் 182 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 242 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 104 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 143 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.சென்னையில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர் எண்ணிக்கை 800க்கும் குறைவாகச் சென்றது. ஆனால், கடந்த 2 வாரங்களாக இது மீண்டும் அதிகரித்து 1300ஐ தாண்டியுள்ளது. இதனால், சென்னையில் 2வது கொரோனா அலை வீசுகிறது என்று பேசப்படுகிறது.