இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு விழா.. பிரதமர் மோடி வாழ்த்து..
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய வான்வெளிப் பகுதிகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பேரழிவு காலங்களில் மக்களுக்கு நீங்கள் ஆற்றும் சேவை மகத்தானது. உங்களின் மன உறுதி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு எல்லோரையும் ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்ட பதிவில், இந்திய விமானப் படை எப்படிப்பட்ட சூழலிலும் நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விமானப்படையை நவீனமயப்படுத்துவது, உள்நாட்டிலேயே தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் நமது விமானப்படையின் திறனை அதிகரித்து வருகிறோம். விமானப் படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.