சூப்பரான பந்து வீச்சு! சுமாரான பேட்டிங்! மீண்டும் மண்ணை கவ்விய சென்னை அணி!
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (08-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் கொல்கத்தா அணி இரண்டு தோல்விகளுக்குப் பின், தொடுக்க இணையை மாற்றி இறக்கியது. எனவே தொடக்க இணையாக ராகுல் திரிபாதி மற்றும் ஷுப்மான் கில் இருவரும் ஆடினர், இதற்குப் பலனும் கிடைத்தது.
ராகுல் திரிபாதி தனுது அதிரடியான ஆட்டத்தைக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 51 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சர் என 81 ரன்களை விளாசினார். இதன் மூலம் இந்த சீசனில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். கொல்கத்தா அணி சார்பாக இவர் மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக கொல்கத்தா அணி இருபது ஓவர் முடிவில் 167 ரன்களை குவித்தது.
சென்னை அணியின் சார்பாகப் பந்து வீசிய அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய டேரன் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்குப் பிறந்தநாள் பரிசளித்தார். தீபக் சஹர் தவிர மற்ற அனைவரும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் சாவ்லாவிற்கு பதிலாகக் களமிறக்கப்பட்ட கரண் ஷர்மாவும் சிறப்பாகச் செயல்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இருபது ஓவரில் 168 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, தொடுக்கத்திலேயே பாப் டியூ பிளசில், மாவியின் வேகத்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
வாட்சன் உடன் கைகோர்த்த ராயுடு நிதானமாக விளையாட, அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். ராயுடு 30 ரன்களை எட்டியபோது நாகர் கோட்டியின் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் வாட்சன் நிதானமாக விளையாடி, இந்த சீசனின் தனது இரண்டாவது அரை சதத்தைப் பதிவு செய்தார். பின்னர் இறங்கிய தோனி, ஜாதவ், சாம் கரண் மற்றும் ஜடேஜா என எவரும் சோபிக்கவில்லை. ஜடேஜா மட்டும் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என 21 ரன்களை விளாசிப் போராடினார். மிடில் ஆர்டர்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணியால் இருபது ஓவர் முடிவில் 157/5 ரன்களையே எடுக்க முடிந்தது. 81 ரன்களை விளாசிய ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இந்த தோல்வியால் சென்னை அணியின் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். சுலபமாக வெற்றி பெற வேண்டிய போட்டியை இப்படியா சொதப்புவது எனக் காட்டமாக உள்ளனர். கேதார் ஜாதவின் தொடர் சொதப்பலால் மட்டுமே சென்னை அணி தோல்வி அடைகிறது எனவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கதறுகின்றனர்.இன்னும் 5 விக்கெட்டுகள் இருந்தும் வெற்றி பெற முடியவில்லையே என தோனியை கலாய்த்தும் வருகின்றனர். தோனியின்,கேதார் ஜாதவ் மீதான நம்பிக்கையை எப்போது தான் நிறைவேற்றுவாரோ?