அதிகம் பிச்சைக்காரர்கள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு 33வது இடம்
நாடு முழுவதும், 4 லட்சம் பிச்சைக்காரர்கள் இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் தமிழகம் 33வது இடத்தை பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், கடந்த 13 நாட்களாக முடங்கி வருகிறது. இருப்பினும், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் சுமார் 4.13 லட்சம் பிச்ரைக்காரர்கள் உள்ளனர். இதில், 2.21 லட்சம ஆண்களும், 1.91 லட்சம் பெண்களும் உள்ளனர். மேலும், பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலமாக மேற்கு வங்காளம் இடம்பிடித்துள்ளது. இங்கு, 81 ஆயிரத்து 244 பிச்சைக்காரர்கள் உள்ளனர். தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசமும், மூன்றாவது இடத்தில் பீகாரும் முறையே 66 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, தமிழகம் 33வது இடத்தில் சுமார் 6 ஆயிரத்து 800 பிச்சைக்காரர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், டமான்&டையூவில் 22 பேரும், லட்சத்தீவில் வெறும் 2 பிச்சைக்காரர்கள் மட்டுமே உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com