வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தினமும் பணம் சம்பாதிக்கலாம்.. ஜாக்கிரதை.. லேட்டஸ்ட் மோசடி..
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தினமும் ₹500 வரை சம்பாதிக்கலாம் என்று கூறி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அது ஒரு புதிய வகையான மோசடி என்றும் கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.
சமீப காலமாக ஆன்லைன் மோசடி மிகவும் அதிகரித்து வருகிறது. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறி போகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆன்லைன் மோசடி கும்பல்களின் ஏமாற்று வேலைகளை முடக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இந்த கும்பல்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. தினமும் ஏதாவது புதிய உத்திகளை கையாண்டு இக் கும்பல்கள் பலரையும் ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலமும் ஏமாற்றி பணம் பறிக்க சில கும்பல்கள் களமிறங்கியுள்ளன. அந்த மோசடி எப்படி நடக்கிறது தெரியுமா? உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் வரும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தால், உங்களது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசை 30 பேருக்கு மேல் பார்க்கிறார்களா? அப்படி என்றால் உங்களுக்கு தினமும் ₹500 வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
பிரபல பிராண்டுகளின் விளம்பரங்களை உங்களது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக போஸ்ட் செய்தால் ஒரு ஸ்டேட்டசுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை பணம் கிடைக்கும். இதன் மூலம் தினமும் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் உங்களது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சும்மா பணம் கிடைக்கிறதே என ஆசைப்பட்டு நம்முடைய வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை தெரிவித்தால் அடுத்த நிமிடமே உங்களுடைய கணக்கில் இருந்து பணம் பறி போய்விடும். எனவே இந்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மோசடியில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.