சாலையின் நடுவில் படுத்திருந்த சிங்கம்... மோட்டார் சைக்கிளில் வந்த நபர்: நடந்தது என்ன?
கடந்த திங்களன்று இரவு சாலையின் நடுவில் படுத்திருந்த சிங்கத்தை எதிர்கொண்ட நபர் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஜூனாகத் பகுதியில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் நிகோதி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய நாள் பணியை நிறைவு செய்து இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார் மகேஷ் சௌந்தர்வா என்ற வனகாவலர். அவர் சென்று கொண்டிருந்தபோது சாலையை மறித்தபடி சிங்கம் ஒன்று படுத்திருப்பதை கண்டார்.
மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கை அணைத்திடாமல், தமது மொபைல்போனில் நிலையை வீடியோ பதிவு செய்தபடி அவர் சிங்கத்துடன் பேசுகிறார். "நாள் முழுவதும் உனக்கு வேலை செய்துள்ளேன். இப்போது என்னை போகவிடு," என்று குஜராத்தி மொழியில் பேசி, ஒலி எழும்பியதும் அந்த சிங்கம் எழுந்து இருளுக்குள் சென்று மறைகிறது. கிர் சரணாலய வன அலுவலர் டாக்டர் அன்சுமன் இதை ட்விட்டரில் பதிவு செய்தள்ளார். இப்பதிவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பகிர்ந்துள்ளார். இந்த சிங்கத்தை தாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பின்தொடர்ந்து வருவதாகவும், வித்தியாசமாக ஏதும் நிகழ்ந்தால் அதை உடனடியாக வீடியோவாக பதிவு செய்யும்படி அதிகாரி அன்சுமன் கூறியதையே நாம் கடைபிடித்ததாகவும் வனவர் மகேஷ் சௌந்தர்வா கூறியுள்ளார்.