செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பாஜக பிரமுகர் சிக்கினார்.

செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பாலக்காட்டை சேர்ந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார்.

சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதும், வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்தியாவில் பல சமூக இணையதளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதாக ஏற்கனவே இன்டர்போல் எச்சரித்திருந்தது. இதையடுத்து கேரளாவில் இந்த கும்பலை பிடிப்பதற்காக ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் தலைமையில் 'ஆபரேஷன் பி ஹன்ட்' என்ற பெயரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கேரளா முழுவதும் பரவலாக பல சமூக வலைத்தள குரூப்புகளில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை பகிர்வதற்கு பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்புகள் மற்றும் கம்ப்யூட்டர்களை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் பாலக்காட்டில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முரளி (28) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது செல்போனில் ஏராளமான சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் ஐடி சட்டப்பிரிவு 67 (பி) பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

More News >>