அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ அதிகாரி தற்கொலைக்கு காரணம்..

சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அஅஸ்வனி குமார் தூக்கில் தொங்கினார். அவரது சாவுக்குக் காரணத்தைக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் அஸ்வனி குமார் வசித்து வந்தார். நேற்று(அக்.7) அவரது மகனும், மருமகளும் வாக்கிங் சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.

வழக்கமாக அந்த நேரத்தில் அஸ்வனி குமார் தனது அறைக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு, தியானத்தில் ஈடுபட்டிருப்பார். ஆனால், நேற்று மகனும், மருமகளும் வீடு திரும்பிய போது, அவரது அறைக்கதவு பூட்டப்பட்டிருக்கிறது. கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அஸ்வனி குமார் தூக்கில் பிணமாகத் தொங்கியிருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

1973ம் ஆண்டு ஒதுக்கீட்டில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பொறுப்பேற்ற அஸ்வனி குமார், இமாச்சலப் பிரதேச டிஜிபியாக இருந்துள்ளார். அதன்பிறகு 2008-2010 வரை சிபிஐ இயக்குனராக இருந்தார். அதன்பிறகு மணிப்பூர், நாகலாந்து கவர்னராகவும் பணியாற்றியிருக்கிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்பு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், சில குறிப்பிட்ட நபர்களை போலீசாரைக் கொண்டு போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கும் ஒன்று.

இந்த வழக்கை அப்போது சிபிஐ இயக்குனராக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்வனி குமார் விசாரித்து வந்தார். அந்த சமயத்தில் இந்த போலி என்கவுன்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். கடந்த 2018ல்தான் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித்ஷா உள்பட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சூழலில், அஸ்வனி குமார் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அஸ்வனி குமார் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மாநில டிஜிபி சஞ்சய் குண்டு கூறுகையில், அஸ்வனி குமார் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது இறப்புக்கு உடல்நிலை பாதிப்புதான் காரணம் என்று கூறியிருக்கிறார். யாரும் எனக்காகக் கவலைப்பட வேண்டாம் என்றும் எந்தச் சடங்குகளும் செய்ய வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

More News >>