மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது போலீஸ் தடியடி..
மேற்கு வங்கத்தில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமிழந்த நிலையில், பாஜக வலுவடைந்து வருகிறது. இன்னும் 6 மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜகவினர், திரிணாமுல் கட்சியினர் இடையே அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது. பாஜகவினர் மீது வன்முறை ஏவப்படுவதாகக் குற்றம்சாட்டி, மம்தா அரசைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில அரசு தடை விதித்தது. எனினும், தடையை மீறி பாஜகவினர் பேரணி நடத்தினர்.
ஆனால், தலைமைச் செயலகத்திற்குச் சிறிது தூரத்திற்கு முன்பாக போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து தடை ஏற்படுத்தியிருந்தனர். மேலும், கொரோனா காரணமாகத் தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்காக இன்று அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. எனினும், பாஜகவினர் தடுப்புகளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பெரிய வாகனங்களின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தினரைக் கலைத்தனர். ஆனாலும் பாஜகவினர் கற்களை வீசியும், டயர்களை எரித்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
பாஜக உள்ளூர் தலைவர் விஜய்வர்கியா கூறுகையில், போலீசார் வேண்டுமென்றே எங்கள் மீது தடியடி நடத்தினர். நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்தினோம். எங்களைத் தடுக்கிறார்கள். மம்தா கட்சியினர் போராட்டம் நடத்தினால் மட்டும் அனுமதிக்கிறார்கள் என்றார்.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பொது இடங்களில் போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஷாகின்பாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தெளிவாகக் கூறியுள்ளது. அதன்படியே நாங்கள் தடை விதிக்கிறோம் என்றனர்.