மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்றது கபாலீஸ்வரர் கோயில். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். இந்த வகையில், இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 22ம் தேதி (நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, கோலவிழி அம்மனுக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அன்றிரவு 9.30 மணியளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். பின்னர், நேற்று காலை கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது.

முன்னதாக, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 4.30 மணிக்கு கொடி மண்டபத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 9 புனித கலசங்களில் புனித நீர், 9 இலைகளில் நவ தானியங்கள் வைத்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம், கெட்டிமேளம் இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் காலை 5.15 மணியளவில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.

பங்குனி பெருவிழாவையட்டி ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் சூரிய வட்டம், இரவு 9 மணியளவில் சந்திர வட்டம் நடக்கிறது. பின்னர், கிளி, அன்ன வாகனங்களில், சுவாமி திருவீதி உலா வருகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>