கொரோனா அனுபவம் எப்படி இருந்தது? பிரபல நடிகை விளக்கம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாள் வீட்டிலேயே தனிமையில் இருந்தேன். இப்போது அந்த நோயிலிருந்து விடுபட்டு விட்டேன் என்கிறார் பிரபல மலையாள நடிகை கவுதமி நாயர்.மலையாள சினிமாவில் துல்கர் சல்மானின் முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். இதன் பின்னர் இவர் பகத் பாசிலுடன் 'டைமன்ட் நெக்லஸ்', 'சாப்டர்ஸ்', 'கூதரா' உள்படப் பல படங்களில் நடித்துள்ளார்.

'விருத்தம்' என்ற படத்தை இவர் டைரக்டும் செய்துள்ளார். சினிமாக்களில் நடித்து வருகின்ற போதிலும் இவர் படிப்பில் புலி. திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் உளவியலில் இளங்கலை படித்த இவர், பல்கலைக்கழகத்திலேயே இரண்டாவது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவரது மருத்துவமனையில் உள்ள ஒரு துறையில் சிலருக்கு நோய்ப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூலம் கவுதமிக்கும் நோய் பரவியது. இதையடுத்து 21 நாள் வீட்டிலேயே இவர் தனிமையில் இருந்தார்.தனது கொரோனா அனுபவம் குறித்து நடிகை கவுதமி நாயர் கூறியது: எனக்குப் பெரிதாக நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. தலைவலி மட்டும் இருந்தது. அதற்கு மருந்து சாப்பிட்டவுடன் குறைந்துவிட்டது.

என்னுடைய மருத்துவமனையில் சிலருக்கு நோய் பாதிக்கப்பட்டிருந்தால் எனக்கும் வந்திருக்கலாம் என்று கருதி பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. நோய் அறிகுறிகள் அதிகமாக இல்லாததால் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து 21 நாள் வீட்டுக்குள் தான் இருந்தேன். இப்போது முற்றிலுமாக நோயிலிருந்து விடுபட்டு விட்டேன். கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் கிடைத்துவிட்டது.இனிமேல் தைரியமாக வேலைக்குச் செல்லலாம். நான் பணிக்குச் செல்கின்ற போதிலும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தை நான் கைவிடவில்லை. ஒரு புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார் நடிகை கவுதமி நாயர்.

More News >>