பாகிஸ்தானுக்கு கொடுப்பீர்கள் தமிழகத்துக்கு தர மாட்டீர்கள் - கமல்ஹாசன் கடும் சாடல்

பாகிஸ்தானோடு, நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு குறித்த தீர்ப்பை பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கிடையில், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியமற்றது. கடினமானது. எனவே, இந்த விஷயத்தில் என்னால் இப்போது எந்த உறுதியையும் தர முடியாது” என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

இதனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி, தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உறுதியளிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>