ஐ எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் தேர்வு 2 பேர் கைது

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் காஷ்மீரை சேர்ந்த ஒரு தம்பதியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவருக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஹைதராபாத்திலிருந்து அப்துல்லா பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த கண் டாக்டரான அப்துல்ரகுமான் என்பவரையும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2013 -14 காலகட்டத்தில் ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக இந்தியாவிலிருந்து சிரியாவிற்கு சென்ற சிலர் குறித்த விவரங்கள் கிடைத்தன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்பட மாநிலங்களிலிருந்து இருந்து சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் குறித்த விவரங்கள் கிடைத்தன. இதற்காக தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்களில் ஆட்களை தேர்வு செய்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய தீவிர விசாரணையில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் காதர் (40) மற்றும் பெங்களூருவை சேர்ந்த இர்பான் நாசிர் (33) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹ்மது அப்துல் காதர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இர்பான் நாசிர் பெங்களூருவில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்துள்ளனர். மேலும் இந்தியாவில் தீவிரவாத செயல்பாடுகளுக்காக நிதி திரட்டியும் வந்துள்ளனர். இந்த நிதியை பயன்படுத்தித் தான் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட டாக்டர் அப்துல் ரகுமான் உட்பட சிலர் சிரியாவுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. இவ்வாறு சென்றவர்களில் 2 பேர் அங்கு வைத்து கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட இர்பான் நாசிர் மற்றும் அப்துல் காதர் இருவரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் இருவரும் 10 நாள் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் உள்ளனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>