இதனால தான் பெண்கள் ஒரு புரியாத புதிர்னு கவிதை எழுதறாங்க - பிக்பாஸ் நான்காம் நாள் என்ன நடந்தது...!
முந்தின நாள் தொடர்ச்சி... அனிதா, சனம் மத்த குக்கிங் டீம் கூட மல்லுகட்ட முடியாம என்னை டீம் மாத்தி விட்ருங்க கேப்டன்னு புராது வச்சாரு சுரேஷ். அதுவும் கேப்டனை கூப்பிட்டு என்னை வேற டீம் போடுங்கனு சொல்லலை, குறிப்பா டாய்லட் கிளினிங் டீமுக்கு அனுப்புங்கனு ஒரே சாய்ஸ் தான் கொடுத்தாரு. ரம்யாவை பொறுத்தவரைக்கும் பொறுமையைத் தாண்டி அவங்க கிட்ட வேறெந்த திறமையும் இருக்கறா மாதிரி தெரியல.
முதல் கேப்டனா என்ன செய்யனும்ங்கறதை விட என்ன செய்யக்கூடாதென்று ரம்யாவை பார்த்து எல்லாருமே கத்துக்கலாம். சுரேஷ் டீம மாறக்கூடாதென்று சனம் ஆன வரைக்கும் முயற்சி செஞ்சாங்க. ஆனா சுரேஷ் பிடி கொடுக்கல. உப்பு போட்டு சோறு திங்கற யாரும் மறுபடியும் அங்க போக மாட்டாங்கனு சொன்னதெல்லாம் அவர் வயசுக்கான பேச்சே இல்லை.
இது வரைக்கும் வாழ்க்கைக் கதை சொன்ன 8 பேர்ல இருந்து 4 பேரை மட்டும் பில்டர் பண்ணச் சொன்னாரு பிக்பாஸ். இதுவரைக்கும் கதை சொல்லாதவங்க அதை செய்யனும். வேல்முருகன், நிஷா, ஆரி, ரியோ தான் அந்த தேர்வுகள். அது முடிஞ்ச உடனே மறுபடியும் சுரேஷ் டீம் மாத்தற மேட்டர். வெளிய சனம் ஏதோ பேசி சுரேஷ் மனசு மாத்த ட்ரை பண்ணிருக்காங்க. அதை நமக்கு முழுசா காட்டல. கடைசியா அவங்க பேசினதை காட்டிட்டு மறுபடியும் கேப்டன் கிட்ட வந்து என்னை டீம் மாத்திடுங்க, எனக்கு இந்த மேடம் கூடத்தான் பிரச்சினை அனிதாவை கைகாமிக்கவும், இன்னொரு பிரச்சனைக்குப் பிள்ளையார் சுழி போட்டாரு. அப்பவும் பின்னாடியே வந்த சனம் என் கூட எதுவும் பிரச்சனையானு வாண்டடா வந்து வண்டி ஏறப்பார்த்தாங்க.
மறுபடியும் என்னை வம்புக்கு இழுக்கறாருனு அனிதா கொதி நிலைல இருக்கும் போதே சோம் அனிதா, வனிதானு உளறிவைக்க இன்னும் புலம்ப ஆரம்பிச்சாங்க அனிதா... என் கேரக்டரை தப்பா காட்டிருவாங்களொனு திரும்பத் திரும்ப பேசவும் ரியோ வந்து, அவன் ஒரு தடவை தான் சொன்னான், நீதான் அதை பெருசு பண்றேன்னு சொல்லி பஞ்சாயத்தை முடிச்சு வச்சான். அடேய் சோம், உனக்கு இருக்குடா ஒரு நாளைக்கு...
கிச்சன் டீம்ல யார் கூடவும் அன்னம், தண்ணீர் புழங்க மாட்டேன்னு சொன்னவரு மறுபடியும் கிச்சன்ல உக்காந்து பிசிபேளா பாத் செய்ய அரிசி எவ்வளவு போடறாங்கனு கேளுங்க, அதுக்கு தகுந்தா மாதிரி பருப்பு ஊறவைக்கலானு ரேகாவை பத்திவிட, அவங்க நேரா போய் சனம் கிட்ட உளறி வைச்சாங்க. இந்த களேபரங்களை பார்க்கும் போது தான் போன வருஷம் ஞாபகம் வருது. போன சீசன் ஆரம்பிச்சதுல இருந்து வனிதா தான் குக்கிங்ல இருந்தாங்க. ஒரு நாள் கூட பெருசா பஞ்சாயத்து வரல. வம்புக்கு இழுக்கறதுக்காக பாத்திரத்தை கழுவுலனு பஞ்சாயத்து வருமே தவிரச் சமையல்ல எந்த குழப்பமும் வரவே இல்லை. முக்கியமா அத்தனை நாள், அத்தனை பேருக்கு சமைத்துக் கொடுத்த போதும் கூட, நான் உங்களுக்கு சமைச்சு போட்டேன்னு ஒரு தடவை கூட வனிதா சொன்னதில்லை. ஆனா இங்க ரெண்டு நாள் ஆகல அதுக்குள்ள், நான் பொங்கல் செஞ்சேன், தோசை ஊத்தினேன்னு ஏக களேபரம். இதுல பிரேக்பாஸ்ட் செய்யவே இல்லையாம்.
அதே மாதிரி போன வருசம் வந்த சீனியர்ஸ் மோகன், பாத்திமா பாபு. மோகன் ட்ராக் மாறிப் போனாலும், பாத்திமா ஓரளவுக்கு அதிகாரத்தோட தான் இருந்தாங்க. வனிதா எகபோகமா இருந்ததால் அவங்க விலகி இருந்தாங்க. இருந்தாலும் அவங்களோட வார்த்தைக்கு மத்த ஹவுஸ்மேட்ஸ் கிட்ட மதிப்பு இருந்தது. ஆனா இந்த சீசன்ல சுரேஷ், ரேகா ரெண்டு பேரையும் ஷிவானி கூட மதிக்கறதில்லை. அவங்களும் வயசுக்கு தகுந்தா மாதிரி நடந்துக்கலை. கேப்டனும் அதிகாரத்தை பயன்படுத்தாமல் போறதால தான் இந்த அமைதியின்மை...
நாள் 4
காந்தக் கண்ணழகி பாட்டு, அனிதாவைத் தவிர எல்லாரையும் காமிச்சது கேமரா, என்னவா இருக்கும்.
அனிதா ஸ்டோரி
ஆரம்பத்துலேயே இந்த கதையை வச்சு சிம்பதி தேடற எண்ணமில்லைனு டிஸ்கிளைமரோட ஆரம்பிச்சாங்க. கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி, நேத்து எழுதினது அனிதாவுக்கு சப்போர்ட் செய்யறா மாதிரி இருந்ததா எல்லாருமே சொல்லிருந்தாங்க. ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடிக்காம போக, வெறுத்து ஒதுக்க நேரடியான காரணங்கள் மட்டும் தான் தேவைனு இல்லை. மறைமுகமா பார்வை சீண்டல்கள், விரல் தீண்டல், அவசியமில்லாத வார்த்தைகள் இப்படி எதுவேணும்னாலும் இருக்கலாம். அதுக்காக இங்க சுரேஷ் அப்படி செஞ்சுருப்பாருனு சொல்ல வரல. அனிதாவோட கோபம் மற்றும் விட்டுக் கொடுக்காத குணத்துக்குக் காரணம் அவங்க கதைல இருந்தது.
நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருக்கும் போது எங்க டிபார்ட்மெண்ட்ல 12 ஆண்கள், ஒரே ஒரு பெண் இருந்தாங்க. அடிக்கடி வாக்குவாதம் வரும். சில்சமயம் என்னால இந்த வேலையைச் செய்ய முடியாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுவாங்க. மேனேஜர் கூட சில சமயம் பேசாம போய்டுவாரு. அப்புறம் தான் ஒரு நாள் எங்க மேனேஜர் ஒரு வார்த்தை சொன்னார். பெண்களுக்கு உடல் ரீதியா சில பிரச்சனைகள் இருக்கும், அந்த நேரத்துல போய் நைய்நைய்னு தொல்லை கொடுத்தா அவங்க இப்படித்தான் ரியாக்ட் செய்வாங்க. அதனால பொறுமையா கேளுங்கனு சொன்னது, அந்த வயசுல ஏதோ புரிஞ்சாலும், இன்னும் வயதாகும் போது நல்லாவே புரிஞ்சுது. அதே அலுவலகத்தில் ஒரு நாள் செம்ம மூட் அவுட்ல இருந்தாங்க அந்த பெண். ரொம்ப நேரம் கேட்டும் எதுவும் சொல்லலை. அப்புறம் வற்புறுத்திக் கேட்ட போது தான் சொன்னாங்க. அவங்க ஆபிஸ் நடந்து வந்துட்டு இருக்கும் போது பைக்ல வந்த ஒருத்தன் அவங்க பின்னாடி தட்டிட்டு போய்ருக்கான். அப்படியான மனநிலைல வேலைக்கு வந்தே ஆகனுங்கற சூழல்ல வந்தவங்க கிட்ட போய்ட்டு, நாம வாக்குவாதம் பண்ணினா எப்படி இருக்கும்.
நேத்து அனிதா சொன்னதும் அப்படியானது தான். பெண்கள் ஆண்களை விடப் பல மடங்கு வலிமையானவர்கள் என்பதற்கு அனிதா சொன்ன விஷயமே உதாரணம். பீரியட் வர இன்னும் ரெண்டு நாள் இருக்குனு நினைச்சுட்டு இருக்கும் போது, சிக்கலான நேரத்துல பீரியட் வந்து, தன்னை சரி செய்யக்கூட வாய்ப்பு கிடைக்காத தருணங்களைக் கடக்காத பெண்களே இல்லைனு சொல்லலாம். ஏற்கனவே குடும்ப க்ஷ்டம், உடல் சோர்வு எல்லாத்தையும் தாண்டி, இன்னொரு மோசமான சூழ்நிலையில் அவங்க இருக்கும் போது ஆண்கள் போய் காதல் வசனம் பேசினா எப்படி இருக்கும். இல்ல கொஞ்சம் வயசான சபல கேஸ்கள் இரட்டை அர்த்தத்துல பேசி சிரிக்கும் போது அவங்களுக்கு எப்படி இருக்கும். அந்த மாதிரியான நேரத்துல பெண்களை exploit செய்ய நினைச்சா அவங்க ரியாக்சன் எப்படி இருக்கும். வேலை செய்யற இடத்துல எதிர்த்துப் பேச முடியாது, சம்பளம் முக்கியம். அப்படி இருக்கும் போது சில சமயங்கள்ல அடக்கி வைத்த கோபங்கள், அவங்க வீட்ல, காதலன் கிட்ட, கணவன், பிள்ளைகள் முன்னாடி கூட வெளிப்படும். அதுவும் ரொம்ப ரேர் தான். காரணமே இல்லாம எறிஞ்சு விழுவாங்க. சட்னு ஏதாவது முடிவு எடுப்பாங்க. அதுக்கு பின்னாடி வெளிய சொல்ல முடியாத சில வேதனைகள் கண்டிப்பா இருக்கும். இதை புரிஞ்சுக்காத ஆண்கள் தான், பெண்கள் ஒரு புரியாத புதிர்னு கவிதை எழுதறோம்.
இதுவே அவங்க வீட்ல இருந்தாங்கனு வைங்க, அண்ணாவோ, தம்பியோ ரூமுக்குள்ள கூட விடாம, அவளை தொந்தரவு செய்யாதடானு அதட்டற அம்மாக்கள் இருப்பாங்க. கிட்டத்தட்ட ஒரு இளவரசி மாதிரி வீட்ல நடத்தபடற அதே பெண்கள் தான், வெளிய எந்த ஒரு சூழ்நிலைக்கும் தயாரா இருப்பாங்க.அனிதாவைப் பொறுத்த வரைக்கும் அந்தந்த வயசுக்கு அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள் அவங்களுக்கு கிடைக்கல. அதில்லாம அவங்களுக்கு கிடைச்ச அனுபவங்கள் அவங்களை இன்னும் வலிமையாக்கிருக்கு. She is very tough. தடைகள் தாண்டி வந்தங்க, அதனால இந்த வாய்ப்புல அவங்க முன்னாடி எந்த தடை வந்தாலும் அடிச்சு தூள் பண்ணனும்னு முடிவோட வந்ததா நினைக்கிறேன்.
நான் எழுதிருக்கறதும் மேலோட்டமானது தான். சிலருக்கு இது தவறா கூட தெரியலாம். நானும் புரியாம கூட எழுதிருக்கலாம். அனிதாவை சப்போர்ட் செய்ய முக்கியமான காரணம் பெனிபிட் ஆஃப் டவுட்டை அனிதாவுக்குக் கொடுத்தது தான். சில சமயத்துல தப்பு செய்த ஆண்களைக் கண்டிக்க, இல்ல அவங்க மேலும் முன்னேறி வராம தடுக்க ஏதாவது ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெருசக்கிடுவாங்க பெண்கள். மறுபடியும் சொல்றேன், இதை எழுதினதால சுரேஷ் தவறு செஞ்சாருனு நான் சொல்ல வரலை. அனிதாவோட செயலுக்குப் பின்னாடி ஒரு நியாயமான காரணமும் இருக்கலாம், இல்ல சுயநலமும் இருக்கலாம்.ரெண்டுக்கும் 50% சான்ஸ் இருக்கு. நான் மேல சொன்ன மாதிரி சந்தேகத்தின் பலனை அனிதாவுக்கு கொடுக்கிறேன்.
கடைசியா அனிதா சொன்ன கதையோட நீதி தான் டச்சிங்கா இருந்தது. முயற்சியை கைவிடாம இருங்க. உங்க வாழ்க்கை எப்ப வேணா மாறும். இதை அனுபவிச்சு சொல்லக்கூடிய வயசு அனிதாவுக்கு இல்ல தான். ஆனாலும் இதை சொல்றாங்கன்னா அவங்க கடந்து வந்த பாதையை நாம புரிஞ்சுக்கனும். அவங்களே சொன்ன மாதிரி இது வெறும் 20% தான். எல்லா பெண்களுக்கு உள்ளேயும் வெளிய சொல்ல முடியாத 80% இருக்கு.
அடுத்து ஷிவானி கதை. 19 வயசுல என்ன சொல்ல. ரொம்ப சிம்பிளா முடிச்சுட்டாங்க.
ஜித்தன் ரமேஷ். ஏதோவொரு துறைல உச்சம் தொட்டவர்களுக்குப் பிறந்து, அந்த அடையாளமே அவங்களுக்கு வாழ்நாள் தடையா இருக்கற ஒரு வாரிசோட கதை. சிவாஜி, கலைஞர், சச்சின், அமிதாப் இப்படி சொல்லிட்டே போகலாம். இவங்க பிறக்கும் போது இல்ல வளரும் போது இவங்களுக்கு ஒரு பெரிய அடையாளம் கிடைச்சுரும். இவங்களோட பெரிய பிரச்சனை என்னான்னா அப்பா/அம்மா சாதிச்ச அதே துறைல இவங்களும் சாதிக்கனும்னு வரது தான். அப்படி வரவங்களுக்கு நேச்சுரல் டேலண்ட் இருந்தா பிரச்சினையில்லை. இப்ப சுந்தரம் மாஸ்டரோட பையன் அப்படிங்கற அடையாளம் போய், பிரபுதேவா அப்பானு ஒரு அடையாளம் வந்து சேர்வது அப்படித்தான். ரமேஷ் அப்படி திறமையோட பிறந்தவர் கிடையாது. வாழ்க்கைல ஒரு கட்டத்துல சினிமானு முடிவெடுக்கறாரு. அதுக்காக அவர் எவ்வளவு முயற்சி செஞ்சார், தன்னை எந்தளவு தயார் படுத்திக்கிட்டாருங்கறது கேள்விக்குறி தான். மேலோட்டமா பார்க்கும் போது ரமேஷோட கதை டச்சிங்கா இருந்தாலும், அவர் தேர்ந்தெடுத்த பாதை தவறுங்கறதும், அதுக்காக அவர் முழுமூச்சா உழைக்கலேங்கறதும் தான் என்னோட பாயிண்ட்..
அடுத்து சுரேஷோட கதை. தெளிவில்லாம சொன்னது தான் மைனஸ். அவரோட வயசுக்கு நிறைய ஏற்ற தாழ்வுகளை பார்த்துருப்பாரு. அதுல இருந்து அவர் என்ன கத்துகிட்டாரு, தன்னை எப்படி மாத்திகிட்டாருனு எதுவும் சொல்லாதது மிஸ்ஸிங். இருந்தாலும் அவர் சொன்னதை வச்சு பார்க்கும் போது, அவர் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துருக்காருனு தான் சொல்லனும்.
இதெல்லாம் முடிஞ்சு மறுபடியும் கிச்சன்ல களேபரம். இந்த தடவை சனம், பாலாஜி. சுரேஷுமென் கூட ப்ராப்ளம்னு சொல்றாரு, நீயும் என் கூட சண்டை போடறேன்னு மறுபடியும் வாண்டட்டா வண்டில ஏறிட்டு இருந்தாங்க. கேஸ் தீர்ந்து போனதை மறுபடியும் செய்தியா வாசிச்சு ஸ்கோர் செஞ்சாங்க அனிதா...
நாளை தொடர்வோம்...