கிரிக்கெட் என்ன அரசு வேலையா? ஒழுங்கா விளையாடாமல் சம்பளம் வாங்குவதற்கு.. சென்னை அணியை சாடும் சேவாக்..!
சென்னை அணியில் இருக்கும் சில வீரர்கள் தங்கள் அந்த அணியில் இருப்பதை அரசு வேலை போலக் கருதுகின்றனர். விளையாடா விட்டாலும் சம்பளம் கிடைக்கும் என்ற தைரியம் தான் அதற்குக் காரணம் என்று கூறுகிறார் சேவாக்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து உண்டு. இதுவரை 3 முறை இந்த அணி கோப்பையை வென்றுள்ளது.
2010, 2011 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது. அதுமட்டுமில்லாமல் வெற்றி சதவீதமும் இந்த அணிக்குத் தான் அதிகமாகும். இதுவரை ஆடிய போட்டிகளில் 61.28 சதவீதம் வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் இதுவரை 8 ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரே அணியும் சென்னை தான். மற்ற அணிகளை விட ரசிகர்களும் சென்னைக்குத் தான் அதிகமாகும். ஆனால் தற்போதைய 13வது சீசன் போட்டியில் சென்னை அணி அணியின் நிலை பரிதாபகரமாக உள்ளது.
தற்போது 6வது இடத்தில் உள்ள இந்த அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டு இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.கடைசியாகக் கொல்கத்தாவுடன் நடந்த போட்டியில் சென்னை அணியின் விளையாட்டு அந்த அணியின் ரசிகர்களுக்குக் கூட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறவேண்டிய நிலையில் இருந்தபோது மோசமாக ஆடி தோற்றது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும்போது பார்மில் இல்லாத கேதார் ஜாதவை பேட்டிங் செய்ய அனுப்பிய தோனியின் முடிவுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக்கும் சென்னை அணிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதலில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த போதே சென்னை அணியைச் சேவாக் கடுமையாகச் சாடினார். அப்போது, சென்னை வீரர்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். இந்நிலையில் கொல்கத்தாவுடன் தோல்வி அடைந்த சென்னை அணியை அவர் மீண்டும் தாக்கியுள்ளார். சேவாக் கூறுகையில், சென்னை அணியில் இடம் பெற்றிருப்பதை சில வீரர்கள் அரசு வேலை கிடைத்தது போலக் கருதுகின்றனர்.
நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அவர்களுக்குச் சம்பளம் கரெக்டாக கிடைக்கும் எனத் தெரியும். இது தான் அதற்குக் காரணமாகும். கொல்கத்தாவுக்கு எதிராக மிகவும் எளிதாக அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் ஜடேஜா மற்றும் கேதார் ஜாதவின் மோசமான ஆட்டம் தான் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும் என்று கூறினார்.