கொரோனா பாதிப்பு 69 லட்சம் தாண்டியது.. மீண்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம் கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்களை விட குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. நோய் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 78 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 50 லட்சம் பேருக்கு தொற்று பாதித்த நிலையில், ஒரு லட்சத்து 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று புதிதாக 70,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 69 லட்சத்து 6,152 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 59 லட்சத்து 6070 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 8 லட்சத்து 93,592 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு நேற்று மட்டும் 964 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனாவல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6490 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. செப்18ம் தேதி முதல் 24ம் தேதி வரையான வாரத்தில் 6 லட்சத்து 49,908 பேர் குணம் அடைந்த நிலையில், 6 லட்சத்து 14,265 பேருக்கு புதிதாக தொற்று பாதித்திருந்தது. செப்.24 முதல் அக்.1ம் தேதி வரையான வாரத்தில் 5 லட்சத்து 98,214 பேர் குணம் அடைந்த நிலையில், புதிதாக 5 லட்சத்து 80,066 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது. அக்.1 முதல் அக்.8 வரையான வாரத்தில் 5 லட்சத்து 54,503 பேர் குணம் அடைந்த நிலையில், புதிதாக 5 லட்சத்து 23,071 பேருக்கு தொற்று பாதித்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

More News >>