அதிமுக எம்.எல்.ஏ.வுடன் செல்ல காதல் மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி.

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவை ரகசியத் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவியும், அவரது தந்தையும் ஐகோர்ட்டில் இன்று (அக்.9) ஆஜராகினர். அவர்களிடம் விசாரித்த பின்பு, மாணவியை அவரது கணவருடன் செல்ல ஐகோர்ட் அனுமதி அளித்தது. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு (34), தியாகதுருகத்தில் வசித்து வருகிறார். அதே ஊரில் சேலம் சாலையில் சுவாமிநாதன் என்ற கோயில் அர்ச்சகர் வசித்து வருகிறார். அவரது மகள் சவுந்தர்யா (19), திருச்செங்கோட்டில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சவுந்தர்யாவும், பிரபுவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு அர்ச்சகர் சுவாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் சாதி பார்க்கவில்லை. எனது மகளுக்கு 19 வயதுதான் ஆகிறது. எம்.எல்.ஏ.வுக்கு 35 வயது ஆகிறது. இவ்வளவு வயது மூத்தவரை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்றார். இந்நிலையில், தியாகதுருகத்தில் உள்ள பிரபுவின் வீட்டில் பிரபுவுக்கும், சவுந்தர்யாவுக்கும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணப் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரபு, பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாயிலில் தீக்குளிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது மகள் சவுந்தர்யாவை அதிமுக எம்.எல்.ஏ. பிரபு கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பிரபுவும், சவுந்தர்யாவும் தாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக பேசி, வீடியோக்களை வெளியிட்டனர். இருவர் பேசிய வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில், சுவாமிநாதன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஏதேதோ பேசி ஏமாற்றி, கடத்திச் சென்றுள்ளார். பிரபு மீது போலீசில் புகார் கொடுத்த பிறகும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை எம்எல்ஏவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள். எனவே, எனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இம்மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுந்தர்யாவும், அவரது தந்தை அர்ச்சகர் சுவாமிநாதனும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவரையும் தனியாகச் சென்று பேசி விட்டு வருமாறு கூறினர். இதன்பின்பும், தான் கணவருடன் செல்ல விரும்புவதாக சவுந்தர்யா உறுதியாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவரை எம்.எல்.ஏவுடன் செல்ல அனுமதித்து வழக்கை முடித்தனர். இதனால், எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சிக்கல் தீர்ந்தது.

More News >>