சூப்பர் ஸ்டாருடன் தல, தளபதியுடன் கடைக்குட்டி சிங்கம் மீண்டும் மோதல்..?

ரஜினி-கமல், விஜயகாந்த்-சரத், விஜய் -அஜீத், சிம்பு-தனுஷ் எனப் போட்டி நடிகர்கள் எப்போதும் இரட்டையர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்களது படங்களைப் போட்டியாக வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். இடைவெளிவிட்டே படங்களை வெளியிடுகின்றனர். இதனால் ரசிகர்கள் உற்சாகம் குறைந்திருக்கிறது. இதனால் இந்த ஹீரோக்களின் படங்களுக்கு வேறு ஹீரோக்கள் போட்டியாகி வருகின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட வெளியான போது போட்டியாகச் சிறுத்தை சிவா இயக்கிய அஜீத்தின் விஸ்வாசம் வெளியாகி பேட்ட படத்தின் வசூலுக்கு கடும் போட்டியாக அமைந்தது. சில இடங்களில் பேட்ட படத்தை விட அதிக கலெக்‌ஷன் பார்த்தது விஸ்வாசம். அதே போல் விஜய்யின் பிகில் படம் வெளியான போது கார்த்தி நடித்த படம் வெளியாகி வசூலில் கடும் போட்டி அளித்தது.

இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் ரஜினியின் பேட்ட படத்துக்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை அளித்த சிவா தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். பிகில் படத்துக்குப் போட்டி படமாக வெளியான கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். ரஜினி- அஜீத். விஜய்-கார்த்தி படங்களின் போட்டி வரும் ஆண்டிலும் தொடரும் சூழல் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். அஜீத் வலிமை படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் படப்பிடிப்பில் இருக்கிறது. தீபாவளி தினத்தில் இப்படங்கள் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடக்கி வைத்தது. விரைவில் இப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கி அநேகமாக வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மோத வாய்ப்பிருக்கிறது. அதேபோல் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முற்றிலும் முடிந்து ரிலீஸூக்கு தயாராக இருக்கும் நிலையில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படப்பிடிப்பு முடிந்து வேகமாக டப்பிங் பணிகள் நடக்கவிருக்கிறது.

டப்பிங் பணியை விரைந்து முடித்து விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் போது கடைக்குட்டி சிங்கம் ஹீரோ கார்த்தி நடித்திருக்கும் சுல்தான் படத்தையும் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.மீண்டும் இப்படியொரு மோதல் அமையுமா என்பது தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. நடக்குமா என்பது பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

More News >>