திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் முக்கிய பூசாரி, 12 பேருக்கு கொரோனா தரிசனம் ரத்து...!
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பல நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலில் 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கடந்த சில வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை இந்த பொக்கிஷங்களின் உண்மையான மதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் பொக்கிஷங்களின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இக்கோவிலில் தற்போது 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் தற்போது மன்னராட்சி இல்லை என்ற போதிலும் இக்கோவில் முழுக்க முழுக்க தென் கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த கோவிலும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் 400 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இக்கோவிலின் தலைமை பூசாரி உள்பட 12 ஊழியர்களுக்கு கொரோனா பரவியது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கம் போல அனைத்து பூஜைகளும் நடைபெறும் என பத்மநாபசாமி கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.