பாஜக தேசிய துணைத் தலைவர் கார் மீது லாரியை மோதியதாக பரபரப்பு புகார்...!

பாஜக தேசிய துணைத் தலைவரான கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா குட்டி சென்றுகொண்டிருந்த கார் மீது லாரியை மோதி அவரை கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அப்துல்லா குட்டி. முதலில் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். இக்கட்சியின் சார்பில் 2 முறை இவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து வழங்கி காங்கிரசில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இதன் பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். இக்கட்சியில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு இவர் உயர் பொறுப்புக்கு வந்தார்.

சமீபத்தில் பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் நடந்தது. இதில் அப்துல்லா குட்டிக்குத் தேசிய துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இது கேரள பாஜகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்துல்லா குட்டி நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு காரில் சென்றார். மலப்புரம் என்ற இடத்தில் இவர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அவரிடம் சிலர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் காரில் ஏறி அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த ஒரு லாரி 2 முறை இவரது கார் மீது மோதியது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் காரை நிறுத்தி விட்டு இறங்கினார். இந்த சம்பவத்தில் காரின் பின்புறம் சேதமடைந்தது. இது தன்னை கொல்ல நடந்த திட்டமிட்ட சதி என்று அப்துல்லா குட்டி கூறுகிறார். இது குறித்து அவர் காடாம்புழா போலீசில் புகார் செய்துள்ளார். கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் இது குறித்துக் கூறுகையில், இது பாஜக தேசியத் துணைத் தலைவர் அப்துல்லா குட்டியைக் கொல்வதற்காக நடந்த சதியாகும். எனவே இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக போராட்டத்தில் ஈடுபடும். இதுகுறித்து போலீசார் உடனடியாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

More News >>