வெங்காயம் எப்படி விளையும்.. ராகுல்காந்திக்கு தெரியுமா.. ம.பி. முதல்வர் கேள்வி.
வெங்காயம் எப்படி விளையும் என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என சிவராஜ்சிங் சவுகான் கிண்டலடித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்த காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பில் நடந்த பேரணியில் பங்கேற்றார். பேரணியில் அவர் டிராக்டரில் அமர்ந்து சென்றார். அவருடன் மாநில முதல்வர் அமரீந்தர்சிங்கும் சென்றார். அப்போது இருவரும் அமர்வதற்கு டிராக்டர் இருக்கைகளில் ஷோபா குஷன் போடப்பட்டிருந்தது. இதை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி உள்பட பாஜக அமைச்சர்கள் விமர்சித்தனர். டிராக்டரில் குஷன் போட்டு ராகுல் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறார் என்று கிண்டலடித்தனர். இதற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், மக்கள் வரிப்பணத்தில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பிரதமருக்காக சொகுசு விமானம் வாங்கினார்களே, அதை யாரும் தட்டிக் கேட்க மாட்டீர்களே.. என்று காட்டமாக கூறினார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ்சிங் சவுகான் இன்று போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல்காந்தி டிராக்டரில் ஷோபா போட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். அவருக்கு வேளாண்மையைப் பற்றி என்ன தெரியும்? வெங்காயம் மண்ணுக்குள் விளையுமா, அல்லது செடியில் விளையுமா என்பதே ராகுலுக்கு தெரியாது.. என்று கிண்டலடித்தார்.