சினிமா தியேட்டர்களை சுத்தம் படுத்தும் பணி தொடங்கியது.. தளபதி படம் வெளியாகுமா?
சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்குப் பரவி இந்தியாவில் இன்னும் பரவிய வண்ணமிருக்கும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதையடுத்து தியேட்டர்களை திறக்க மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டு வந்தனர். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்த தளர்வுகளில் வரும் 15-ந் தேதி தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டதுடன் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, தியேட்டருக்கு உள்ளே வரும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும், கைகளைச் சுத்தமாக்கக் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும், நுழைவு வாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் அறிகுறி பார்த்துக் காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு சினிமா தியேட்டர் திறப்புக்கு அனுமதி அளித்த பிறகும் இன்னும் தமிழக அரசு அனுமதி கிடைக்கவில்லை. முதல்வருடன் ஆலோசித்த பின்னரே தியேட்டர்கள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.வரும் 22ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்று வாட்ஸ் ஆப்களில் தகவல் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கிருமி நாசினி தெளித்துச் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என்பதால் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.