சந்தேகத்தால் ஆத்திரம் மனைவியின் துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த வாலிபர்...!
நம்பிக்கை துரோகம் செய்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், மனைவியின் தலையைத் துண்டித்து தலையுடன் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்த கொடூர சம்பவம் நடந்தது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலம் உத்திர பிரதேசம் ஆகும். கடந்த வருடம் இந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.பலாத்கார சம்பவங்களும் இங்கு தான் அதிகளவில் நடைபெறுகின்றன.
சமீபத்தில் இந்த மாநிலத்தில் உள்ள ஹத்ராசில் 19 வயது இளம்பெண் 4 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. மாநில அரசும், போலீசும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பாண்ட்யா என்ற இடத்தை சேர்ந்தவர் சின்னார் யாதவ் (38). இவரது மனைவி விமலா (35). சின்னார் யாதவுக்கு தன் மனைவி மீது நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது மனைவி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக அவருக்குச் சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக அடிக்கடி அவர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சின்னார் யாதவ், கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். பின்னர் ரத்தம் சொட்டச் சொட்ட அந்த தலையுடன் நடந்து சென்று அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் போலீசார் கைப்பற்றினர். சின்னார் யாதவ் மனைவியின் தலையுடன் நடந்து செல்வதைச் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.