நடிகை பலாத்கார வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எம்எல்ஏவுக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு.
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணியில் உள்ள ஒரு நடிகை கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு இரவில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடிகை தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நடிகையிடம் சில மாதங்கள் டிரைவராக இருந்த சுனில்குமார் என்பவர் உட்பட 8 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பிரபல முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்தது. இதையடுத்து திலீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நடிகர் திலீப் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலில் நடிகர் திலீப்புக்கு எதிராக சாட்சி சொன்ன மலையாள சினிமா நட்சத்திரங்கள் சிலர் பின்னர் நடந்த விசாரணையில் பல்டி அடித்தது பரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் விசாரணை நடந்தபோது பிரபல நடிகை பாமா, நடிகர் சித்திக் ஆகியோர் பல்டி அடித்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையே தனக்கு எதிராக சாட்சி கொடுக்க கூடாது என்று முன்னணி நடிகர், சாட்சிகள் பலரை மிரட்டி வருவதாக தகவல் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸ் தரப்பு சாட்சியான ஒருவர், இந்த வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி தனக்கு அடிக்கடி மிரட்டல் வருவதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியது ஏற்படுத்தியது.
இந்நிலையில் எர்ணாகுளம் திருக்காக்கரை காங்கிரஸ் எம்எல்ஏவான பி.டி. தாமசுக்கும், நடிகை பலாத்கார வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று பலரிடமிருந்து மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட அன்று அவர், பிரபல நடிகரும், இயக்குனருமான லாலின் வீட்டுக்கு சென்று விவரத்தை கூறினார். லாலின் வீட்டுக்கு அருகே தான் பலாத்காரம் செய்த கும்பல் நடிகையை விட்டு விட்டு சென்றது. அப்போது உடனடியாக நடிகர் லால், திருக்காக்கரை எம்எல்ஏ பி.டி. தாமசை தனது வீட்டுக்கு வரவழைத்தார். அவரிடமும் நடந்த சம்பவம் குறித்து நடிகை கூறினார்.இதையடுத்து போலீசார் பி.டி. தாமஸ் எம்எல்ஏவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் போலீஸ் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் தான் வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று பலரிடம் இருந்து தனக்கு அன்பாகவும், மிரட்டல் தொனியிலும் போன்கள் வந்ததாக தாமஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்றும் நடந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.