கேரள தங்க கடத்தல் வழக்கு : குற்றப் பத்திரிகையில் முதல்வர் பெயர்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தலில் கேரள மாநில அரசின் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து நடந்த விசாரணையில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தொடர்ந்து கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சொப்னா சுரேஷுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கேரள அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளானா காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நியமனத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார் என்ற குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.
சொப்னா சுரேஷ் கேரள அரசின் ஸ்பேஸ் பார்க் திட்டத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதல்வருக்கு தெரிந்தே இவரது பணி நியமனம் நடைபெற்றிருக்கிறது. தான் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றி கொண்டிருப்பது முதல்வர் பினராய் விஜயனுக்கு தெரியும் என்று ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணையின் போது தெரிவித்திருந்தார் இதனடிப்படையில் இந்த வழக்கில் முதல்வர் உள்பட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மட்டுமின்றி அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றதை தொடர்ந்து கேரள மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பினராய் விஜயன் ஆதரவாளர்கள் சிலர் ஸ்வப்னா சுரேஷின் நியமனம் குறித்து தான் விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது. தவிர கடத்தலில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதை திரித்து வெளியிடுகின்றன என்று சொல்லி வருகிறார்கள்.